மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்
- முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 309 மனுக்களை வழங்கினார்கள்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 309 மனுக்களை வழங்கினார்கள்.
அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.14 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.56 ஆயிரம் மதிப்பிலான திறன் பேசிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.