உள்ளூர் செய்திகள்

தேனி மாவட்டம் கூடலூர் வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் அய்யப்ப பக்தர்கள்.

கூடலூர் அருகே கடும் பனியிலும் பாதயாத்திரையாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஓட்டல்களில் தரமற்ற உணவு வினியோகிப்பதாக புகார்

Published On 2022-11-30 04:46 GMT   |   Update On 2022-11-30 04:46 GMT
  • தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தே பக்தர்கள் குழுவாகவும், தனியாகவும் நடந்து செல்வதால் விடிய விடிய மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
  • பெரும்பாலான ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு தயாரித்து வழங்கப்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கூடலூர்:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கு பிறகு கோவிலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வாகனங்கள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்து பாத யாத்திரையாகவும் சபரிமலைக்கு நடந்து பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். குமுளி அடுத்துள்ள புல்மேட்டு பாதையில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம்.

ஆனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தே பக்தர்கள் குழுவாகவும், தனியாகவும் நடந்து செல்வதால் விடிய விடிய மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. கடும் பனியிலும் பக்தர்கள் சாலையில் பஜனை பாடியபடி செல்கின்றனர். இவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்கள் கூடலூர், கம்பம் பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தங்கி உணவு சாப்பிட்டு வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு தயாரித்து வழங்கப்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பழைய மாவால் செய்த இட்லி, தோசை, சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவுகள் வினியோகம் செய்து வருகின்றனர். ஆனால் விலையும் மற்ற ஓட்டல்களை விட சற்று அதிகரித்தே விற்பனையாகிறது. சுகாதாரமற்ற உணவை அதிக விலை கொடுத்து வாங்கி உண்பதால் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் பல வித நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த ஓட்டல்களை முறையாக ஆய்வு செய்து சுகாதாரமற்ற உணவு தயாரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இனி வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபரிமலை சன்னிதானத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கேன்களில் கூட தண்ணீர் கொண்டு செல்ல முடிவதில்லை. ஆங்காங்கே கிடைக்கும் கடைகளில் மட்டுமே தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இது போன்ற சூழலில் உணவகங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News