மேட்டுப்பாளையம் அருகே யானையை பார்த்ததும் குரைத்த நாயை விரட்டிய பாகுபலி காட்டு யானை
- கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானை நடமாடி வருகிறது.
- இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்-வன பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமயபுரம் எனும் பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதி அடர்வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவி லங்குகள் அவ்வப்போது ஊருக்கு நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானை நடமாடி வருகிறது. மேலும்,பாகுபலி காட்டு யானையுடன் தற்போது வேறு சில யானைகளும் இணைந்து அதே பகுதியில் சாலையை கடக்க துவங்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் பகுதி வழியாக சாலையைக்கடந்து மற்றொருபுறம் சென்றது.
அப்போது, யானை வருவதை கண்ட அங்கு சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று யானையை பார்த்து குரைக்க தொடங்கியது.
இதனால் ஆவேசம் அடைந்த பாகுபலி யானை பிளிறிய படியே நாயை விரட்டி சென்றது.
பின்னர் அங்கிருந்து விளை நிலங்களை நோக்கி சென்று விட்டு, மீண்டும் வனப்பகுதியை நோக்கி நடந்தது.
தற்போது பாகுபலி யானை தன்னை பார்த்து குரைத்த நாயை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாகுபலி யானையை கண்டதும் நாய் குரைத்ததையும், குரைத்த நாயை பார்த்த காட்டு யானை தெருநாயை விரட்டுவதையும் படத்தில் காணலாம்.