போலீசார் வாகன சோதனையில் திருட்டு மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் சிக்கிய சிறுவர்கள்-பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்
- வாகன சோதனையில் சிக்கியவர்கள் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
- பெட்ரோல் பங்கில் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வண்ணார்பேட்டைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
நெல்லை:
பாளை வண்ணார் பேட்டை பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவர்கள் சிக்கினர்
அப்போது தெற்கு புறவழிச்சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் 5 சிறுவர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்களை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வழிமறித்த போது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.
அவர்களை 2 போலீசார் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.அதில் இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
திருட்டு மோட்டார் சைக்கிள்
உடனே அவர்களை போலீசார் காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சேரன்மகாதேவியிலிருந்து மோட்டார் சைக்கிளை திருடிச் கொண்டு நெல்லைக்கு வந்ததாக தெரிவித்தனர்.
கொள்ளையடிக்க திட்டம்
டவுன் நயினார் குளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வண்ணார்பேட்டைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 2 அரிவாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் பாளை இன்ஸ்பெக்டர் திருப்பதி விசாரணை நடத்தி வருகிறார்.