உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள்: மார்ச் மாதம் முழுவதும் பிரமாண்ட நிகழ்ச்சிகள்

Published On 2025-02-13 12:23 IST   |   Update On 2025-02-13 12:23:00 IST
  • ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு, உடைகளை வழங்கிடுவது என்றும் முடிவெடுக்கப்படுகிறது.
  • நிகழ்ச்சியில் ஆப்பூர் சந்தானம், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசிக்க காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் சிக்கராய புரத்தில் நடந்தது.

இதில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மனம் மகிழ்ந்து பாராட்டுகின்ற வகையில், திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாள் மார்ச் 1-ந் தேதி வருகிறது.

அன்றைய தினம் காஞ்சி வடக்கு மாவட்டம் முழுவதும் பட்டி, தொட்டியெங்கும் மிகவும் சிறப்பான வகையில் மாதம் முழுவதும் எழுச்சியுடன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவது என்றும், மாவட்டம் முழுவதும் கழக கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கிடுவது என்றும் 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு, உடைகளை வழங்கிடுவது என்றும் முடிவெடுக்கப்படுகிறது.

முதலமைச்சரின் தன்னலமற்ற உழைப்பையும், அவர் கழகத்திற்காக ஆற்றிய அரும் பெரும் பணிகளையும், 4 ஆண்டு கால ஆட்சியின் அளப்பறிய சாதனைகளையும், நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில் மார்ச் 1-ம் தேதி முதல் மாதம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்திடுவது, கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசுகளை வழங்குவது என்றும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் மார்ச் 1-ஆம் தேதி அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் அணிவிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, பொருளாளர் விசுவநாதன், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் காமராஜ், மண்டலக் குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் மண்டலக்குழுத் தலைவர் வே.கருணாநிதி, திருநீர்மலை த.ஜெயக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், ஆப்பூர் சந்தானம், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News