பண்ருட்டியில் 5 ஆயிரம் முந்திரி நிறுவனங்கள் மூடல் பலகோடி வருவாய் இழப்பு
- மின்கட்டணத்தை இரு மடங்காக அரசு உயர்த்தி உள்ளது.
- முந்திரி நிறுவனங்கள் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர்:
தொழிற்சாலைகள் மின்கட்டணத்தை இரு மடங்காக அரசு உயர்த்தி உள்ளது. இதனால் முந்திரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி அரசு மின்கட்டண உயர்வை கைவிட கோரி தமிழக முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் அனைத்து முந்திரி நிறுவனங்கள் முழு விடுப்பு அளித்து "ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில்" ஈடுபட்டு உள்ளனர். மிக முக்கியமான முந்திரி நகரமாக திகழும் பண்ருட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய முந்திரி நிறுவனங்கள் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ள அனைத்துமுந்திரி உற்பத்தி யாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்திஇன்றுகாலை 10.30 மணி அளவில் பண்ருட்டிபஸ் நிலையம் பின்புறம் பஸ் வெளியே வரும் வழியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முந்திரி சங்க தேசிய செயலாளர் பண்ருட்டி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மலர் வாசகம், பொருளாளர் சி.ஆர். செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான முந்திரிஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், முந்திரி நிறுவன அதிபர்கள் திரளாக கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கைவிட கோரி கோஷம் எழுப்பினர்.5 ஆயிரம் முந்திரி நிறுவனங்கள் மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.