சேலத்தில் ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
- சேலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
- ஒரே நேரத்தில் 80 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.
தனி விமானம் மூலம் சேலம் வந்த அவரை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் 5 ரோடு அருகே உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் இரவு அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கினார்.
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு 50 ஆயிரத்து 202 பயனாளிகளுக்கு ரூ.170.32 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
விழாவில் மேட்டூர் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேட்டூரில் ரூ.6.7 கோடி செலவிலும், எடப்பாடியில் ரூ. 5 கோடி மதிப்பிலும் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படுகின்றன.
போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி புனரமைத்து அழகுப்படுத்தும் பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் உத்தமசோழபுரம்-திருமணிமுத்தாற்றின் குறுக்கே மற்றும் தென்னங்குடிபாளையம்-வசிஷ்ட ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.235.82 கோடி யில் 331 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விழாவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.653 கோடியில் இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கண சாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் ரூ.102 கோடியில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் உள்பட சேலம் மாவட்டத்தில் ரூ.1,367.47 கோடியில் முடிவுற்ற 390 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.