உள்ளூர் செய்திகள்

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

Published On 2022-09-29 15:30 IST   |   Update On 2022-09-29 15:30:00 IST
  • வாழை மற்றும் மரவள்ளி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன் இத்திட்டத்தில் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :-

மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

முக்கியமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 பயிர்களுக்கு ரபி பருவத்தில் காப்பீடு செய்யப்பட உள்ளது.

வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3505-ம், மரவள்ளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1018 பிரீமியமாக நிர்ணயிக்கபட்டு பிரீமியம் செலுத்த 28.2.2023 கடைசி நாள் ஆகும்.

மேலும் மாவட்ட வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமான இப்கோ டோகியோ மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய காப்பீட்டு நிறுவனம் மூலம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ரபி 2022 - 2023-ல் செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

ரபி பருவத்தில் வாழை மற்றும் மரவள்ளி போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை வி.ஏ.ஓ.விடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தக்கத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன் இத்திட்டத்தில் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவும் . இது குறித்தான மேலும் விபரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அல்லது தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம்.

விவசாயிகள் தங்களது பயிர்களை குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே காப்பீடு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News