உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம். 

கிருஷ்ணகிரியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Published On 2023-06-17 15:01 IST   |   Update On 2023-06-17 15:01:00 IST
  • மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.
  • 17 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் தமிழகத்தில் ஏற்கனவே 11 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மீதமுள்ள 27 புதிய மாவட்டங்களுக்கும் மத்திய அரசின் 100 சதவீத நிதி ஒதுக்கீட்டுடன் திட்டம் விரிவாக்கம் செய்து திட்டத்தை செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டம் தொடங்கி செயல்படுத்துவதற்கு ஏதுவாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 17 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் பொருட்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்டம் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகும். இந்த உதவி மையத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனநல ஆலோசனை, மருத்துவ உதவி, காவல் உதவி , சட்ட உதவி, தங்குமிட வசதி, உடனடி மீட்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டும் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிகள் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பொருட்டும் மேற்கண்ட இரு திட்டங்களுக்கும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி 4 துறைகளுக்கு நடத்தப்பட்டு திட்டத்தின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டு செயல்முறைப்படுத்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தும் பொருட்டு இரண்டாம் காலாண்டிற்கு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று செயற்குழு உறுப்பினர்களுடன் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News