மேட்டுப்பாளையம் பவானி ஆறு, பேரூர் படித்துறையில் குவிந்த பக்தர்கள்
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
- பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஷவர் வசதி
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையாக சென்று தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து பவானி ஆற்றுக்கு சென்று, அதனை ஆற்று நீரில் விட்டு நீராடினர். பின்னர் சிறிது அரிசியை தானமாக பெற்றுவீட்டுக்கு சென்று சமையல் செய்து முன்னோர்களுக்கு படைத்து விரதம் முடித்தனர். அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் என். எஸ் .வி.ஆறுமுகம் தலைமையில் செயலாளர் சுகுமாரன், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து சமுதாய சங்கங்களின் சேர்ந்த உறுப்பினர்கள் பொதுமக்கள் சிரமமின்றி திதி தர்ப்பணம் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 27 புரோகிதர்கள் பொதுமக்களுக்கு திதி தர்ப்பணம் பூஜைகளை செய்து வழிபட ஏற்பாடு செய்தனர்.
பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அங்கு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஷவர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து விட்டு, அதில் குளித்து சென்றனர்.
வீட்டுக்கு திரும்பி இறந்த தங்கள் முன்னோர்களுக்கு விருப்பமான உணவு பண்டங்கள், வடை, பாயாசத்துடன் படையல் இட்டு காக்கைக்கு வைத்துவிட்டு, தங்கள் குடும்பத்தினருடன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.