உள்ளூர் செய்திகள்

80 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வினியோகம்

Published On 2024-09-26 02:16 GMT   |   Update On 2024-09-26 02:16 GMT
  • 80 ஆயிரத்து 50 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை:

புதிய ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பிக்கப்பட்ட 2 லட்சத்து 89 ஆயிரத்து 591 விண்ணப்பங்களில் இதுவரை 80 ஆயிரத்து 50 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்தவுடன், ஒரே குடும்பத்தில் வசித்து வந்தவர்கள் பலரும் தனி ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால், புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால், 2023 ஜூலை 6-ந் தேதி முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 17 ஆயிரத்து 197 ரேஷன் அட்டைகளும், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 10 ஆயிரத்து 380 ரேஷன் அட்டைகளும் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டன.

மேலும், 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 45 ஆயிரத்து 509 ரேஷன் அட்டைகள் அச்சடித்து வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மீண்டும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர், நாடாளுமன்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த பிறகு மீண்டும் புதிய ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களின் விவரங்களை சரிபார்க்கும் கள விசாரணை மற்றும் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

அதைத்தொடர்ந்து புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, புதிய ரேஷன் அட்டைகளுக்காக பெறப்பட்ட 2 லட்சத்து 89 ஆயிரத்து 591 விண்ணப்பங்களில் 1 லட்சத்து 22 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் 80 ஆயிரத்து 50 ரேஷன் அட்டைகள் அச்சடித்து வினியோகிக்கப்பட்டு உள்ளன.

இதுவரை சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களில் 99 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

மேலும் 68 ஆயிரத்து 291 விண்ணப்பங்களை சரிபார்க்கும் மற்றும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News