பசுமாடு இறந்து கிடந்த இடத்தில் பதிவான சிறுத்தை கால் தடம்.
எடப்பாடி அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம்
- விலங்கின் காலடி தடங்களை பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி:
எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்க நாடு ஊராட்சி, சன்னியாசி முனியப்பன் கோவில் அருகிலுள்ள ஒடுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் பழனிசாமி, விவசாயியான இவரது விவசாயத் தோட்டம் அங்குள்ள வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இவரது விவசாயத் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு கடந்த மாதம் 7-ந் தேதி அன்று திடீரென காணாமல் போனது.
இதனை அடுத்து பழனிசாமி தனது தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டினை தேடி சென்ற போது சற்று தூரத்தில் உள்ள வனப்பகுதியில் ஆடு இறந்து கிடப்பதும், அதன் உடலில் பெரும் பகுதியை மர்ம விலங்கு தின்று இருப்பதும் கண்டு பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கிருந்த மர்ம விலங்கின் காலடித் தடங்களை பதிவு செய்தனர். ஆட்டினை வேட்டையாடிய மர்ம விலங்கின் காலடித்தடம் சிறுத்தை காலடி தடத்தை போல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த வனத்துறையினர், அது குறித்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட உதவி வன அலுவலர் செல்வகுமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பக்கநாடு கிராமம், கோம்பைகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதையன் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்றது. பசு மாட்டின் உடலின் ஒரு பகுதியை சிறுத்தை கடித்துத் தின்ற நிலையில், காலையில் அப்பகுதிக்கு வந்த விவசாய மாதையன் தனது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடு இறந்து கிடப்பதையும் அதன் உடல் பகுதியை மர்ம விலங்கு கடித்து தின்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த விலங்கின் காலடி தடங்களை பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பக்க நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க செல்ல வேண்டாம் எனவும், மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் சிறுவர்களை தனியாக வேளியே விட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்த ஒன்றிய குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ் ஆறுதல் கூறினார். எடப்பாடி அருகே நள்ளிரவு நேரத்தில் மீண்டும் விவசாய தோட்டத்தில் கட்டியிருந்து பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.