அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
- வயல்களில் சாய்ந்துள்ள நெற்கதிர்களில் உள்ள மணிகள் முளைவிட தொடங்கி விடும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- கொள்ளிட கரையோர கிராமங்களில் 200 ஏக்கர் வாழை பயிர்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் இடைவிடாது மழை கொட்டியது.
இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இன்று பல இடங்களில் விட்டு விட்டு தூறி கொண்டே இருந்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் மெலட்டூர், கொத்தட்டை, அனன தோட்டம், புலவர்நத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தும், மழைநீரில் மூழ்கியும் சேதம் அடைந்துள்ளன.
மேலும் வயல்களில் சாய்ந்துள்ள நெற்கதிர்களில் உள்ள மணிகள் முளைவிட தொடங்கி விடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் செல்லும் அதிகப்படியான தண்ணீரால் ஆச்சனூர், மருவூர், வடுகக்குடி உள்ளிட்ட கொள்ளிட கரையோர கிராமங்களில் 200 ஏக்கர் வாழைப் பயிர்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் வேர் அழுகி வாழை பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நெல்லை போல வாழைக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்.
தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட வாழை பயிர்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து வெயில் அடித்தால் மட்டுமே நெற்பயிர்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.