பண்ருட்டி அருகே பரபரப்பு மகளை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் நிலையம் எதிரில் தந்தை தீக்குளிக்க முயற்சி
- பெற்றோர் திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
- பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண் ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகளுக்கும், அதே ஊரை ஒரு வாலிபருக்கும் இடையே காதல் உருவானது. ஆனால், 2 பேருக்கும் வயது இல்லாததால் இவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி, கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறை வாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊர் நல அலுவலர் தனபாக்கியம் சிறுமி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்: அதில் வயது சான்றுடன் சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்று விட்டார். இந்நிலையில் சிறுமியின் தந்தை ஏழுமலை நேற்று திடீரென முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.