கோவையில் 2 வாலிபர்களை ஓட, ஓட வெட்டிய கும்பல்
- நண்பர்களுடன் வந்த சஞ்சய், முன் விரோதத்தில் விக்னேஷ் மற்றும் மாரிச்செல்வத்தை அரிவாளால் ஓட ஓட வெட்டினார்.
- பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (22). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர் கத்தியை மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு பொது மக்களை பயமுறுத்தும் வகையில் வீதிகளில் சென்று வந்தார். இதனை பார்த்த விக்னேஷ் நண்பர்களுடன் சேர்ந்து சஞ்சயை போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டி அனுப்பினார்.
இதன் காரணமாக அவருக்கு விக்னேஷ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று விக்னேஷ் அவரது நண்பர் மாரிச்செல்வம் என்பவருடன் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு தனது நண்பர்களுடன் வந்த சஞ்சய், முன் விரோதத்தில் விக்னேஷ் மற்றும் மாரிச்செல்வத்தை அரிவாளால் ஓட ஓட வெட்டினார். இதில் நிலை குலைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஞ்சய் உள்பட அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.