உள்ளூர் செய்திகள்

மலைப்பகுதியில் ஜெலட்டின், டெட்டனேட்டர்களை பதுக்கிய 3 பேர் கைது

Published On 2024-07-02 04:30 GMT   |   Update On 2024-07-02 04:31 GMT
  • வெடி பொருட்களுடன் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மதுரை வீரன் புகார் அளித்தார்.
  • சிதறிய வெடி பொருட்களை மறைவாக வைத்திருந்தது தெரிய வந்தது.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட செம்பரான்குளம் பாண்டியன் பாறை என்ற இடத்தில் வனக்காப்பாளர்கள் மதுரைவீரன், சிவக்குமார் வேட்டை தடுப்பு காவலர் காமராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு 15 ஜெலட்டின் குச்சிகள், 23 டெட்டனேட்டர்கள், 18 என்.இ.டி. டெட்டனேட்டர் ஆகியவை கிடைத்தன. கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களுடன் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மதுரை வீரன் புகார் அளித்தார்.

அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. பிரதீப், டி.எஸ்.பி. மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், நக்சல் ஒழிப்பு போலீசார், ஒட்டன்சத்திரம் ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான வனக்குழுவினர் ஆகியோர் சம்மந்தப்பட்ட பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணையில் தனியார் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதற்காக இந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. அப்போது பணியில் இருந்த கம்ப்ரசர் வாகனம் விபத்துக்குள்ளாகவே கோவிந்தராஜ் என்பவர் படுகாயமடைந்தார்.

இதனால் சிதறிய வெடி பொருட்களை மறைவாக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வெடி பொருட்களை பதுக்கிய கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (52), வெடிபொருட்களை வழங்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த வேல்முருகன் (52), சரவணன் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி. பிரதீப் தெரிவிக்கையில், செம்பரான்குளம் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக இந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடையவே வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே நக்சல்,பயங்கரவாத நடமாட்டம் குறித்த எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றார்.

கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பயங்கரவாத பயிற்சி மேற்கொண்ட நவீன் பிரசாத் என்பவரும் சுட்டு கொலை செய்யப்பட்டார். எனவே வனப்பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News