உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் சீல் வைப்பு

Published On 2024-07-04 05:38 GMT   |   Update On 2024-07-04 05:38 GMT
  • ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல்.
  • சி.பி.சி.ஐ.டி போலீசார் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத்தனர்.

பண்ருட்டி:

கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் மெத்தனால் சப்ளை செய்த புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ் உள்பட 21 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாதேஷ், மற்றும் சாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் சின்னதுரை உட்பட 11 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் மாதேஷ் கூறும்போது, `பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூர் பகுதியில் மூடப்பட்ட பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று அதிகாலை சி.பி.சி.ஐ.டி போலீசார் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை கைப்பற்றினர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் முன்னிலையில் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத்தனர்.

Tags:    

Similar News