தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: தி.மு.க. 16-வது பொதுக்குழு விரைவில் கூடுகிறது

Published On 2024-11-21 08:31 GMT   |   Update On 2024-11-21 08:51 GMT
  • 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கும் பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • தி.மு.க. பொதுக்குழுவில் சுமார் 3,500 பேருக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர்.

சென்னை:

வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் தி.மு.க. தலைமை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில், பல மாதங்களுக்கு முன்னதாகவே, தேர்தல் ஒருங்கிணைப்பாளர் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

குறிப்பாக, கட்சியில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, அதன்மூலம் இளம் நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை வழங்குவது, மாவட்ட வாரியாக பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கும் பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பார்வையாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் தோல்வியடைந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டதுடன், சிறப்பாக பணியாற்றினால் தேர்தலில் சீட் கிடைக்கும் என்பதையும் சூசகமாக கூறி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்.

அத்துடன், நிர்வாகிகளிடம் 200 தொகுதிகள் என்ற இலக்கையும் வழங்கி அதற்கேற்ப பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் கட்சியின் உயர்நிலை செயல் திட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 2026-ம் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் 15-வது செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பின், 16-வது மற்றும் இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டியுள்ளது.

தற்போது பருவமழைக் காலம் என்பதால், வருகிற ஜனவரி மாதம் இந்த கூட்டத்தை நடத்தலாம் என்று தி.மு.க. தலைமை முடிவெடுத்துள்ளது.

தி.மு.க. பொதுக்குழுவில் சுமார் 3,500 பேருக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கம் போதாது.

இதனால் சென்னையை தவிர்த்து வேறு மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டத்தை நடத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தின் மையப்பகுதியாக திகழும் திருச்சியில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடம் மற்றும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் தீர்மானங்கள் குறித்து இறுதி செய்யப்பட உள்ளது. இந்த முறை திருச்சியில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவது திருச்சி மாவட்ட தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தலாமா என்றும் கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News