போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற இளம்பெண் மரணம்- குழந்தை பிறந்த 20 நாளில் சோகம்
- பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார்.
- போலி டாக்டர்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் இதுபோல பல்வேறு இடங்களில் கிளீனிக் வைத்து செயல்படுகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகில் உள்ள கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் சர்வேஸ் (வயது 30) விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (24). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் 1 ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கருவுற்ற பிரியதர்ஷினி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர் வீடு திரும்பினார்.
சில நாட்களிலேயே பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு மருந்து மாத்திரைகளை பிரின்ஸ் வழங்கி உள்ளார். இவர் முறையான மருத்துவம் படிக்காமல் தனது வீட்டிலேயே கிளீனிக் போல நடத்தி அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே பிரின்ஸ்சிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் வலி குறைவதற்காக அதிக வீரியம் கொண்ட ஊசியை அவருக்கு செலுத்தினார். சற்று நேரத்தில் பிரியதர்ஷினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கொடைக்கனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த பிரின்சை தேடி வருகின்றனர். அவர் முறையான மருத்துவம் படிக்காமல் பல வருடங்களாக கிராம மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். தற்போது அவரது சிகிச்சையால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் மற்றும் மருத்துவ துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
போலி டாக்டர்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் இதுபோல பல்வேறு இடங்களில் கிளீனிக் வைத்து செயல்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு நீண்ட தூரம் செல்லவேண்டும் என்பதால் அருகில் கிடைக்கும் மருத்துவத்தை அப்பகுதி கிராம மக்கள் எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஒருசில டாக்டர்களும் உதவி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு கொடைக்கானல் மலை கிராமங்களில் போலி டாக்டர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.