உள்ளூர் செய்திகள்

தி.மு.க.வின் அத்துமீறல்களை முறியடித்து பா.ம.க. வெற்றி பெறும்- டாக்டர் ராமதாஸ்

Published On 2024-07-04 06:07 GMT   |   Update On 2024-07-04 06:07 GMT
  • 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
  • மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பு , மதுவிலக்கு அமல்படுத்த மறுப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனை அறிந்த தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது.

பா.ம.க. கூட்டத்திற்கு வரும் பெண்களை அடைத்து வைப்பது, உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என தி.மு.க. அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து பா.ம..க வேட்பாளர் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

அ.தி.மு.க.வின் நோக்கமும் பா.ம.க.வின் நோக்கமும் இத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.க.வை தீய சக்தி என்று கற்றுகொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு. எனவே பா.ம.க.வின் மாம்பழ சின்னத்தில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை இல்லாத காரணங்களை காட்டி அரசு தட்டிகழிக்கும் அரசு பதவி விலகவேண்டும். விழுப்புரம் அருகே டி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் இறந்துள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியிலிருந்து முருகன் வாங்கி வந்த கள்ளச்சாராயம் என தெரியவந்துள்ளது. இதிலிருந்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறியதால் முதல்-அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் பலர் கல்வி கற்றுள்ளார் என்று தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி கூறியிருப்பது கண்டிக்கதக்கது.

தி.மு.க. சமூகநீதிக்கு செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம். சட்டநாதன் அறிக்கையை செயல்படுத்த மறுத்தவர் கருணாநிதி. இடைத்தேர்தலுக்கு பின் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்தால் மின் கட்டண உயர்வை அரசு கைவிடும்.

மாநில கல்வி கொள்கை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதால் இதை கைவிட வேண்டும் என பா.ம.க . தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீட் தேர்வை திணித்த தி.மு.க.வும், காங்கிரசும்தான்.

அப்போது நீட் தேர்வை அறிமுகம் செய்த தி.மு.க. இன்று அதற்கு எதிராக காட்டிக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்-அமைச்சர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

கல்விகண் திறந்த காமராஜர் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாமல் உள்ளது. இப்பல்கலை கட்டுப்பாட்டில் 121 கல்லூரிகள் உள்ளது. பிற கல்லூரிகளிடமிருந்து தலா ரூ.50 லட்சம் கேட்டுள்ளது.

தமிழக அரசு இப்பல்கலைக்கு ரூ.500 கோடி கடன் வழங்க வேண்டும். தி.மு.க தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்ததால் தான் முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு வரவில்லை என தெரிகிறது. அப்படியே பிரச்சாரம் செய்தாலும் தி.மு.க தோல்வி அடையும். மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News