கால்வாயில் செத்து மிதக்கும் வாத்துகள்- துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி
- நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
- தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது நாகராஜகண்டிகை கிராமம். இங்கு, மாதர்பாக்கம் செல்லும் சாலையையொட்டி உள்ள முக்கிய நீர் நிலையாக ஓடை கால்வாய் உள்ளது. இந்த நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த கால்வாயில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் செத்து மிதக்கின்றன. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியில் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் இவ்வளவு வாத்துக்கள் எப்படி இறந்தன என்பது மர்மமாக உள்ளது. அவை இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.
வாகனங்களில் கிராமம் தோறும் சென்று வாத்து வியாபாரம் செய்திடும் வியாபாரிகள் யாரோ சிலர், தங்களின் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்து போன வாத்துக்களை மொத்தமாக கொண்டு வந்து இந்த ஓடைகால்வாயில் வீசினார்களா? அல்லது நீரோடையில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்ததால் மேய்ச்சலுக்கு வந்த வாத்துக்கள் இறந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
ஓடை கால்வாயில் செத்து மிதக்கும் அழுகிய வாத்துகளை அப்புறப்படுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியும், சுகாதார துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.