உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் பலத்த மழை: அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

Published On 2024-10-08 12:30 IST   |   Update On 2024-10-08 12:30:00 IST
  • கடுங்குளிரால் மக்கள் அவதி.
  • மலைப்பாதையில் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

ஏற்காடு:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெப்பமும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதே போல் நேற்று மதியமும் திடீரென அடர்த்தியான மேகமூட்டம் நிலவியது.

பின்னர் மதியம் 2 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 2 மணிநேரம் கனமழையாக கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் குட்டைபோல் தேங்கியது.

தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் இரவு 9 மணியளவில் மீண்டும் கனமழையாக பெய்ய தொடங்கியது. இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக கடுங்குளிரும் நிலவியது. தொடர்ந்து விடிய, விடிய, மழை தூறிக்கொண்டே இருந்தது.

இன்று காலையும் ஏற்காட்டில் சாரல்மழை பெய்தது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குடை பிடித்தப்படி சென்றனர்.

ஏற்காட்டில் கொட்டிய மழையின் காரணமாக மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டி வருகிறது. சேலம் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஏற்காட்டில் 44.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News