விடுதி உரிமையாளர் எரித்துக்கொலை: மறுவாழ்வு மையத்தில் பழகியவர்கள் கைவரிசை
- 5 பேர் சிவராஜை சரமாரியாக தாக்கி மது பாட்டிலை உடைத்து குத்தினர்.
- டீசல் ஊற்றி எரித்து 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கால் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 60). இவர் பெரும்பள்ளம் பகுதியில் சொந்தமாக தங்கும் விடுதி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
மது பழக்கத்துக்கு அடிமையான சிவராஜை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மதுரை அழகர் கோவில் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராஜை அவரது சகோதரி சாந்தி அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்து வந்தார்.
அதன் பின் சிவராஜ் வீட்டுக்கு செல்லாமல் தனது விடுதி அறையிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் சிவராஜூக்கும் மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மதுரை தத்தனேரியைச் சேர்ந்த மணிகண்டன் (29), அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகியோருக்கும் இடையே தொடர்ந்து நட்பு ஏற்பட்டது.
அவர்கள் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில் சிவராஜின் விடுதிக்கு கடந்த வாரம் வந்துள்ளனர். மறு வாழ்வு மையத்தில் இருந்து போதையில் இருந்து மீண்ட அவர்கள் மீண்டும் ஒன்றாக மது குடித்ததாக தெரிகிறது.
பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில் சிவராஜிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் 5 பேரும் சிவராஜை சரமாரியாக தாக்கியதுடன் மது பாட்டிலை உடைத்து குத்தினர்.
படுகாயமடைந்த சிவராஜை அருகில் இருந்த பயர் கேம்ப்பில் வைத்து டீசல் ஊற்றி எரித்தனர். பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு அனைவரும் தப்பிச் சென்றனர்.
இதனிடையே சிவராஜ் மாயமானது குறித்து அவரது சகோதரி சாந்தி கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், அவருடன் தங்கி இருந்த 4 பேர் மாயமானதை அறிந்த போலீசார் அவர்களின் விபரத்தைக் கேட்டனர்.
மேலும் சிவராஜ் தங்கி இருந்த அறையில் ரத்தக்கறை இருந்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடலை தேடிய போது பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டனர். அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விடுதியில் இருந்து தப்பிச் சென்ற மணிகண்டன் தாங்கள் சிவராஜை தாக்கி கொலை செய்தது குறித்து மறுவாழ்வு மைய நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மணிகண்டனை அவர்கள் கைது செய்தனர். கொடைக்கானல் போலீசாரும் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். குடிபோதையில் இந்த கொலை நடந்ததா? அல்லது விடுதியை அபகரிக்கும் நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மறு வாழ்வு மையத்தில் ஏற்பட்ட பழக்கம் கொலையில் முடிந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.