கள்ளக்காதலியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்றேன்-கைதான தம்பி பரபரப்பு வாக்குமூலம்
- தனியாக வசித்த நான் சிறுமுகையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்தேன்.
- வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கழுத்து ,மார்பு, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினேன்.
மேட்டுப்பாளையம் ,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள திம்பம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 67). நிதி நிறுவன அதிபர். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரங்கராஜை அவரது தம்பி குபேந்திரன் (57) என்பவர் வெட்டி கொலை செய்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அண்ணனை வெட்டி கொலை செய்த குபேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது மனைவி கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். தனியாக வசித்த நான் சிறுமுகையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்தேன். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தோம். எனக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து நான் தனியாக வசித்த எனது அண்ணன் ரங்கராஜ் வீட்டிற்கு சென்று தங்கினேன். பின்னர் கிடைக்கும் வேலைகளை செய்து அவருடன் வசித்து வந்தேன். எனது அண்ணனிடம் எனது கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறினேன். அதற்கு அவர் எதிப்பு தெரிவித்து என்னை கண்டித்தார். நேற்று முன்தினம் எனது கள்ளக்காதலி என்னை தேடி எனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது எனது அண்ணன் அவரிடம் உனக்கு பணம் தர முடியாது. எனது தம்பியும் உன்னை திருமணம் செய்ய மாட்டான் என கூறி உள்ளார். இது குறித்து அவர் என்னிடம் தெரிவித்தார்.எனவே நான் இது குறித்து எனது அண்ணனிடம் கேட்டேன். அப்போது அவருக்கும் எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதிகாலை 2.30 மணிய ளவில் எனது அண்ணன் கட்டிலில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது நான் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கழுத்து ,மார்பு, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினேன். இதில் சம்பவஇடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் நான் தலை மறைவாக இருந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிரு ந்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.