கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பழுதடைந்த பெரிய மணி சீரமைப்பு
- தீபாரதனை நேரங்களில் கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்பு உள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம்.
- பெரிய மணி சீரமைக்கும் பணி முடிந்து இன்று மாலை தீபாராதனை நடக்கும் போது ஒலிக்கும்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இங்கு தீபாரதனை நேரங்களில் கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்புஉள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம். பெரிய மணி அடிக்கும்போது சுற்றுவட்டார பொது மக்களும் பக்தர்களும் கோவிலில் தீபாராதனை நடக்கிறது என்பதை அறிவார்கள். உடனே அவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட விரைந்து செல்வார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களாக பெரிய மணி பழுதுபட்டு கிடப்பதால் ஒலிப்பது இல்லை. இதனால் பக்தர்களும் பொதுமக்களும் மனவேதனை அடைந்தனர். பெரிய மணி ஓசை தீபாராதனை நேரங்களில் ஒலிக்க செய்வதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இது பற்றி சமீபத்தில் மாலை மலர் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் பழுதுபட்ட கோவில் கோபுர பெரிய மணியை நேரில் வந்து பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதன் பயனாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பழுதுபட்டு கிடந்த பெரிய மணியை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. இதனை பக்தர்கள் பாராட்டி உள்ளனர். இந்த பெரிய மணி சீரமைக்கும் பணி முடிந்து இன்று மாலை தீபாராதனை நடக்கும் போது ஒலிக்கும் என்று தெரிகிறது.
பெரிய மணி சீரமைக்கும் பணி நடந்த போது எடுத்த படம்.