ஆலயம் கட்ட அனுமதி கொடுத்ததாக கூறி கணபதிபுரம் பேரூராட்சி முன்பு திடீர் முற்றுகை போராட்டம்
- எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. சமரச பேச்சு
- கட்டுமான பணிக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளமடி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக சிறிய கிறிஸ்தவ ஆலயம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் தங்கவோ, உடைகள் மாற்றவோ அறைகள் இல்லாததால் அதற்கான அறைகள் கட்டுவதற்காக கணபதிபுரம் பேரூராட்சியில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு செயல் அலுவலர் அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆலயம் கட்டுவதற்காக அனுமதி வழங்க செயல் அலுவலர் ஒத்துழைப்பதாக கூறி நேற்று மாலை திடீரென சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் செயல் அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ராஜாக்கமங்கலம் இன்ஸ் பெக்டர் கண்ணன் தலை மையிலான போலீசார் விரைந்து வந்து அங்கு கூடி நின்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் நாகர் கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து அவசர கூட்டம் நடத்தி அதில் சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டுமான பணிக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனை யடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு நின்றவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கணபதிபுரம் பேரூராட்சி பகுதியில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு காணப்பட்டது.