உள்ளூர் செய்திகள் (District)

காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி - கலெக்டர்-மேயர் வழங்கினர்

Published On 2022-07-17 08:41 GMT   |   Update On 2022-07-17 08:41 GMT
  • நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ், கியாஸ் சிலிண்டர்வெடித்து விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்டார்
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி அறிவித்தார்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் பார்வதி புரத்தில் டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது கியாஸ் சிலிண்டர் விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் அரவிந்த் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் டாக்டரிடம் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ், கியாஸ் சிலிண்டர்வெடித்து விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்டார்.பின்னர் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். டாக்டர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களிடம் தொலை பேசியில் நலம் விசாரித்தார். விஜய்வசந்த் எம்.பி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி அறிவித்தார்.

இதையடுத்து கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார்கள். ஆர்.டி.ஓ.சேதுராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், தாசில்தார் சேகர், தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம், மண்டல தலைவர் ஜவகர் ஆகியோர் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் படுகாயம் அடைந்த 8 பேருக்கு முதலமைச்சர் ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி அறிவித்தார். உடனடியாக அந்த நிவாரணங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டு உள்ளது.படுகாயம் அடைந்த 8 பேருக்கும் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 2 சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் மாநகரில் சாலை ஓரங்களில் உள்ள டீக்கடைகளை ஒழுங்குபடுத்த நட வடிக்கை எடுக்கப்படும்.மேலும் எந்த ஒரு கட்டிடங்களும் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருந்தால் அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News