உள்ளூர் செய்திகள்

நவராத்திரி 3-ம் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பவனி - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-09-29 14:48 IST   |   Update On 2022-09-29 14:48:00 IST
  • வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி
  • அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது

கன்னியாகுமரி :

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது.

3-ம் திருவிழாவான நேற்று இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது.

கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தைமூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வரஇசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் 3-ம் திருவிழா மண்ட கப்படி கட்டளை தாரர் மகாதானபுரம் ரவி, கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 4-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் நடந்தது.

பின்னர் கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு8 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில்எழுந்தருளி அம்மன் கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags:    

Similar News