ஆண்கள் உடலில் வைக்கோல் சுற்றி நேர்த்திக் கடன்
- ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா ஆண்கள் உடலில் வைக்கோல் சுற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
- 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர். இதனை வெள்ளலூர் நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுவர். இங்கு பிரசித்தி பெற்ற ஏழைகாத்தம்மன் கோவில் உள்ளது.
வெள்ளலூரை தலைமை இடமாகக் கொண்டு 60 கிராமங்கள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு ஏழைகாத்த அம்மன் காவல் தெய்வமாய் விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவிழா நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டு திருவிழா வெள்ள லூர் கோவில் திருவிழா நடந்தது. முன்னதாக நேர்த்திக்கடன் செலுத்தும் நூற்றுக்கணக்கான ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி முகத்தில் முகமூடி அணிந்து பெரிய ஏழை காத்தம்மன் கோவிலுக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர். நடுத்தர வயதுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சேலையை மட்டும் அணிந்து மதுக்களையம் தூக்கியும், திருமண வயதுடைய பெண்கள் சாமி சிலைகளை தூக்கி ஊர்வலம் சென்றனர். இத்திருவிழா இப்பகுதி மக்கள் நலமாக வாழவும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.