சங்கிலி கருப்ப சுவாமி-பராசக்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா
- திருமங்கலம் அருகே சங்கிலி கருப்ப சுவாமி - பராசக்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.
- விழாவில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் சங்கிலி கருப்பசாமி - பராசக்தி காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா விமரிசை யாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
மதுரை, விருதுநகர் மற்றும் வில்லூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அழகு செட்டியார் ஊரணியில் இருந்து பராசக்தி அம்மன் கோவில் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
மேலும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பறவைக் காவடி எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சங்கிலி கருப்ப சுவாமிக்கு பாப்பா ஊரணியிலிருந்து கரகம், சந்தனகுடம் எடுத்து ஊர்வலமாக வந்து சங்கிலி கருப்பு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பாப்பா ஊரணியிலிருந்து சப்பரம் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.