- மண்டலம் 1-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 18-ந் தேதி நடக்கிறது.
- 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயா், ஆணையாளா் தலைமையில் நடைபெறும்.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளரிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளா்களிடமும் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனா்.
மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல 1-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயா், ஆணையாளா் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆனையூர், பார்க்டவுண், நாகனாகுளம், அய்யா் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகா், பரசுராம்பட்டி, லூர்து நகா், ஆத்திக்குளம், புதூர், வள்ளுவா் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகா், கூடல்நகா், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகா், வண்டியூர் ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வாி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.