உள்ளூர் செய்திகள்

அமைச்சர் கீதாஜீவன் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய காட்சி.

தூத்துக்குடி தங்கம்மாள் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

Published On 2022-09-02 09:15 GMT   |   Update On 2022-09-02 09:15 GMT
  • அமைச்சர் கீதாஜீவன் 62 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
  • எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பேசினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியிலுள்ள தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 62 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

மக்களுக்கான ஆட்சி தி.மு.க. மட்டும் தான். எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பார்கள். உங்களுடைய பெற்றோர்கள் தெய்வமாக இருப்பதை போல் வாழ்க்கை தரம் உயர்வதற்கு மெழுகுவர்த்தியை போல் தன்னை உருக்கி கொண்டு நல்ல அறிவுரை வழங்கி உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுக்கும் ஆசிரியர்களும் அதற்கு சமமானவர்கள். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு பல்வேறு உதவிகளை உங்களுக்கு செய்து கொடுக்கிறது.

இதன் மூலம் நன்றாக படித்து இந்த நாட்டின் பெருமையை வெளி உலகத்திற்கு நீங்கள் எடுத்துச்சென்று தாய் தந்தையர்களை மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டும். நான் படித்த காலத்தில் இது போன்ற வசதி வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இப்போது உள்ள மாணவ-மாணவிகள் எல்லா வகையிலும் கொடுத்து வைத்தவர்கள் இதைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் சுரேஷ்குமார், மற்றும் அல்பட், பாஸ்கர், ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News