விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்பு தானம்
- ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
- தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ராஜ்குமார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜ்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.
மூளை சாவடைந்து உறுப்பு தானம் செய்த அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9.10 மணிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா, திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மதுரா செந்தில் மற்றும் போலீசாரால் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அவரது உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக மேலகவுண்டன்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் ராஜ்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.