மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பாகல்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் ஆய்வு
- சேலம்மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
- அரசு மருத்துவமனை வளாகம் முழுமையும் தண்ணீர் சூழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் காற்றாற்று வெள்ளம் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடியது.
ஓமலூர்:
சேலம்மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. 2 மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பலத்த மழையினால், அரசு மருத்துவமனை வளாகம் முழுமையும் தண்ணீர் சூழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் காற்றாற்று வெள்ளம் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடியது.
பாகல்பட்டி கிராமத்தில் மிக அதிகபட்ச மழை பெய்த–தால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல பாகல்பட்டி அரசு மருத்துவமனை கட்டிடத்தை சுற்றிலும் அதிகபட்ச தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் மருத்துவமனை முன்பாகவும் நுழைவாயிலிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தண்ணீரிலேயே நடந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையின் அனைத்து கட்டிடங்களையும் மழைநீர் சூழ்ந்து கட்டிடங்கள் இடிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள, குழந்தைகள், முதியவர்கள் மழை நீர் சூழ்ந்தே இருப்பதால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், வார்டு உறுப்பினர் பொன்னி குமார் மற்றும் வருவாய்த்துறை வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் வந்து தேங்கியுள்ள நீரை அகற்ற முடியுமா? என ஆய்வு செய்தனர் .
பள்ளமான பகுதியில் மருத்துவமனை கட்டப்பட்டதால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் இருந்ததை தொடர்ந்து கட்டிடமும் பழுதடைந்து வருவதை தொடர்ந்து உடனடியாக பாகல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து மருத்துவமனை வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் மருத்துவ துறை ஈடுபட்டு உள்ளது.