உள்ளூர் செய்திகள்

காந்திமாநகர் விளையாட்டு மைதானத்தில் திடீரென குடியேறிய பொதுமக்கள்

Published On 2023-10-06 14:06 IST   |   Update On 2023-10-06 14:06:00 IST
  • ஈரோட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் டெண்ட் அடித்து குடும்பமாக வசிப்பதாக தகவல்
  • குப்பைகள் அதிகளவில் குவிவதால் சுகாதார சீர்கேடு

பீளமேடு,

கோவை காந்திமா நகர் பகுதி 25-வது வார்டுக்குட்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க கூடிய பகுதியாகும். இந்த பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பொழுதை கழிக்கவும், நடைபயிற்சி செல்வதற்கு வசதியாகவும் இந்த வார்டில் ஒரு விளையாட்டு மைதானமும் உள்ளது.

இந்த நிலையில் இந்த மைதானத்தில் ஈரோட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கேயே டெண்ட் அடித்து, குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதனால் அந்த பகுதியே குப்பைமேடாக காட்சியளிக்கிறது. மேலும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு, தேங்கி அங்கேயே கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு சுகாதார சீர்கேட்டால் நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதா வது:-

வருடம் தோறும் இந்த மைதானத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இவர்கள் இங்கே தங்குவதும், அதன்பிறகு செல்வதும் தொடர்கதையாக உள்ளது.

இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை அங்கேயே போட்டுவிடுவதால் அந்த பகுதியே குப்பை மேடாக காட்சியளித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News