திண்டுக்கல் அருகே குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை மடக்கி பிடித்த போலீசார்
- கணவாய்பட்டி கருப்பணசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியதில் 3 பேர் படுகாமயடைந்தனர்.
- போலீசார் விசாரணையில் போதையில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
குள்ளனம்பட்டி:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சொக்கநாராயணன்(37). கார் டிரைவர். நேற்று திண்டுக்கல் அருகே ராஜக்காபட்டி கல்லுப்பட்டியில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். கணவாய்பட்டி கருப்பணசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதினார். இதில் 3 பேர் படுகாமயடைந்தனர்.
சொக்கநாராயணன் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன் ஜெயக்குமார், பரமசாமி தலைமையில் போலீசார் தடுப்புகளை சாலையில் ேபாட்டு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் தடுப்புகளையும் மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரட்டிச்சென்று பொன்னகரம் அருகே காரை மடக்கிபிடித்தனர்.
போலீசார் விசாரணையில் சொக்கநாராயணன் போதையில் இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரை இன்று போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.