பூண்டி ஏரி 5-வது ஆண்டாக தொடர்ந்து முழுவதும் நிரம்பியது
- சென்னை நகர மக்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.
- பூண்டி ஏரியில் நீர் மட்டம் குறைந்ததும் கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் என்று தெரிகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஓன்று பூண்டி ஏரி. இந்த ஏரி கடந்த 1944-ம் ஆண்டு சுமார் 121 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ரூ.65 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெறும் திட்டம் 1983-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு ஆந்திரா மாநிலம் வழங்க வேண்டும்.
இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் 450 கனஅடி தண்ணீரும் அப்படியே கொசஸ்தலை ஆற்றில் வீணாக வெளியேறி வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் பூண்டி ஏரி தொடர்ந்து 5 வது ஆண்டாக இதுவரை இல்லாத வகையில் முழு கொள்ளவை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் பருவமழை குறைவு காரணமாக ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது மற்றும் போதுமான அளவு கிருஷ்ணா தண்ணீரை பெற முடியாததால் பூண்டி ஏரி தொடர்ந்து முழுவதும் நிரம்பாமல் இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக போதுமான மழை மற்றும் கிருஷ்ணா நீரை பெறுவதால் ஏரியின் நீர் மட்டம் முழுகொள்ளவை எட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது இதுவரை இல்லாத சாதனையாக உள்ளது.
தற்போது போதுமான அளவு பூண்டி ஏரியில் தண்ணீர் உள்ள நிலையில் கிருஷ்ணா தண்ணீரை பெற்றால் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் இப்போதைக்கு கிருஷ்ணா நீரை திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியில் நீர் மட்டம் குறைந்ததும் கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் என்று தெரிகிறது. இதனால் சென்னை நகர மக்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.