போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
- போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி பலர் விவசாயப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆடு, மாடுகள் வயல் வெளிகளில் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் கிழக்கு கடற்கரை சாலையிலேயே இரவு, பகலாக திரிகின்றன. பெரும்பாலும் மாடுகளே அதிகளவில் கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்துக்கொள்கிறது.
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளும், குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் இந்த மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்கள். இது குறித்து தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாடுகளின் உரிமையாளர்கள் நாளை (10-ந் தேதி)-க்குள் தங்களது மாடுகளை பிடித்து கட்ட வேண்டும். தவறினால் 11-ந் தேதி முதல் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.