உள்ளூர் செய்திகள்

கடலாடி யூனியன் துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை

Published On 2023-04-02 14:32 IST   |   Update On 2023-04-02 14:32:00 IST
  • கடலாடி யூனியன் துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது. யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜெய ஆனந்தன், துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் யூனியன் தலைவர் முனியசாமி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் குமரையா முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கிய வுடன் தி.மு.க. கவுன்சிலர்கள் யூனியன் தலைவரிடம் தமிழக அரசு மீது அவதூறாகபொய் பிரசாரம் செய்யும் துணை தலைவர் ஆத்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

மனுவை பரிசீலிப்பதாக ஆணையாளர் கூறியதன் அடிப்படையில் கவுன்சிலர்கள் இருக்கையில் அமர்ந்தனர். பின்பு நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் மாய கிருஷ்ணன்: ஓரிவயல், மாரந்தை, வேப்பங்குளம், பகுதிகளில் உள்ள ஊரணி களில் படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் குமரையா: கீழச்செல்வனூர் கிராமத்தில் இருந்து நொண்டி கருப்பணசாமி கோவில் செல்ல தார் சாலை அமைக்க வேண்டும்.

கவுன்சிலர் பிச்சை: ஏர்வாடி பகுதியில் கோடை காலம் நெருங்குவதால் காவிரி கூட்டு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகலட்சுமி மலைராஜ்: ஏர்வாடி தர்கா பகுதியில் இருந்து சடைய முனியன் வலசை கிராமம் வரை தார்சாலை அமைக்க வேண்டும். சின்ன ஏர்வாடி, ஆதஞ்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

கவுன்சிலர் ஜெயச்சந்திரன்: மீனங்குடி, கருங்குளம், கடுகு சந்தை ஊராட்சி பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் ராஜேந்திரன்: சிறைக்குளம் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும்.

கவுன்சிலர் நரிப்பையூர் முருகன்: நரிப்பையூர் ஊராட்சி மாணிக்க நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். மாணிக்க நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பாரதமாதா பள்ளி செல்ல தார் சாலை அமைக்க வேண்டும்.

கவுன்சிலர் சேது பாண்டியன்: பீ.கீரந்தை தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலையில் பேவர் பிளாக் அமைக்க வேண்டும். கொத்தங்குளம் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல தார் சாலை அமைக்க வேண்டும். சேரந்தை கிராமத்தில் உள்ள ஊரணியில் படித்துறை அமைக்க வேண்டும்.

துணை சேர்மன் ஆத்தி: கன்னிராஜபுரம் ஊராட்சி ரோச்மாநகர் கிராமத்தில் அங்கன்வாடி அமைக்கப்பட்டு 7 வருடம் ஆகியும் அந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க வில்லை. இதுகுறித்து மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் கவுன்சிலர்கள் பார்வதி ஜெயபாலன், குஞ்சரம் முருகன், பானுமதி ராம மூர்த்தி, செய்யது ராவியா, ஞானம்மாள், மகேசுவரி சக்திவேல் உள்ளிட்ட பலர் கோரிக்கை களை மனுக்களாக அளித்தனர்.

கவுன்சிலர்கள் கொடுத்த கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலாடி யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.

Tags:    

Similar News