உள்ளூர் செய்திகள்

துடியலூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் மீட்பு

Published On 2023-11-09 14:24 IST   |   Update On 2023-11-09 14:33:00 IST
  • மரத்தின் கிளையை பிடித்து மேடான பகுதியில் நின்றதால் தப்பினார்.
  • தீயணைப்பு படையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்

கவுண்டம்பாளையம்,

கோவை இடிகரை அத்திபாளையம் பகுதியில் கவுசிகாநதி பெரும்பள்ளம் செல்கிறது. இந்த பள்ளத்தின் நடுவே பொதுமக்கள் நடந்து செல்ல மற்றும் போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கு வசதியாக தரைப்பாலமும் உள்ளது.

இன்று அதிகாலை பெய்த மழை காரணமாக இந்த பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் தரைப்பாலம் மூழ்கியது.அப்போது அத்திபாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். தரைப்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

அவரது சத்தம்கேட்டும் அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் மரத்தின் கிளையை பிடித்து மேடான பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Tags:    

Similar News