பண்டாரவிளை - பெருங்குளம் வரை ரூ.65 லட்சத்தில் புதிய தார் சாலை பணி-ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மங்கலகுறிச்சி வடிகால் வாய்க்காலை சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி:
பண்டாரவிளையில் இருந்து பெருங்குளம் வரை ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடியசைத்து வேலையை தொடங்கி வைத்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
தொடர்ந்து பெருங்குளம் மற்றும் மங்கலகுறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த வயல்களில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரை வடியவைப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே காடுவெட்டியில் இருந்து சிவராமங்கலம், பொட்டல், மாங்கொட்டாபுரம், பெருங்குளம், மங்கலகுறிச்சி வழியாக வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு ஆத்தாம்பழம் வடிகால் மடை வழியாக தாமிரபரணி ஆற்றுக்குள் தண்ணீர் செல்கிறது. தற்போது இந்த வாய்க்கால் பெருங்குளம், மங்கலகுறிச்சி மற்றும் ஆத்தாம்பழம் வரை தூர்வாரப்படாமல் அமலை செடிகள் ஆக்கிரமித்து தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் வயல்களில் அதிகப்படியாக தேங்கும் மழை நீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் மங்கலகுறிச்சி பகுதியில் உள்ள வாழை வயலுக்குள் தண்ணீர் சென்று வாழை பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏவிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ மங்கலகுறிச்சி வடிகால் வாய்க்காலை சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடியாக வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றிட நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து ஒரிரு நாளில் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள அமலை செடிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மங்கலகுறிச்சி, பெருங்குளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, மாநில ஊடக பிரிவு முத்துமணி, ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்துபிரதாபன், சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் பிரவீனா, பெருங்குளம் நகர தி.மு.க. செயலாளர் நவநீத முத்துக்குமார், அவைத்தலைவர் நாகராஜன், சிறுபான்மை பிரிவு சகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.