எடப்பாடியை சேர்ந்த ஓட்டல் ஊழியர் பாம்பு கடித்து பலி
- கேட்டரிங் தொழிலாளியான தீனா, கடந்த 5 நாட்களுக்கு முன் சேலத்தை அடுத்த அரியானூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
- அப்போது அப்பகுதியில் திடீரென ஒரு விரியன் பாம்பு ஓட்டலுக்குள் நுழைந்தது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி க.புதூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் தீனா (வயது 21).
கேட்டரிங் தொழிலாளியான தீனா, கடந்த 5 நாட்களுக்கு முன் சேலத்தை அடுத்த அரியானூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென ஒரு விரியன் பாம்பு ஓட்டலுக்குள் நுழைந்தது.
பாம்பை கண்டு அங்கு இருந்தவர்கள் மற்றும் சக ஊழியர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தீனா, துணிச்சலுடன் சென்று அந்த பாம்பை பிடித்து அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக பாம்பு தீனாவை கடித்தது. உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீனாவை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கடந்த 5 நாட்களாக தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தீனா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.
வேலைக்குச் சென்ற இடத்தில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.