உள்ளூர் செய்திகள்

ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு சேலம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்

Published On 2023-10-11 15:18 IST   |   Update On 2023-10-11 15:18:00 IST
  • முருங்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26 -ந் தேதி மக்கள் சந்திப்பு முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
  • மேலும் சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதனை சந்தித்தும் மனு கொடுத்தனர். அப்போது ஒரு வாரத்திற்குள் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்வதாக கூறினார்.

சேலம்:

சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26 -ந் தேதி மக்கள் சந்திப்பு முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.

சஸ்பெண்டு

இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அதிகமானோர் ஏறியதால் மேடை சரிந்து விழுந்தது .இதையடுத்து அந்த கிராமத்தின் பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியான கண்ணன் என்பவரை கோட்டாட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து முறையிட முயன்றனர். அப்போது கலெக்டர், அவர்களை சந்திக்க மறுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

மேலும் சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதனை சந்தித்தும் மனு கொடுத்தனர். அப்போது ஒரு வாரத்திற்குள் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்வதாக கூறினார் . ஆனால் இதுவரை அந்த சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யவில்லை.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் சூரமங்கலம் தர்மா நகரில் உள்ள சேலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியான கண்ணனை மேடை சரிந்ததற்காக சஸ்பெண்டு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் . மேலும் அவர் வகித்த கொத்தனூர் கிராம நிர்வாக பதவிக்கு வேறு ஒருவரை கூடுதல் பொறுப்பு வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே உடனடியாக அவரது சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News