உள்ளூர் செய்திகள்

நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

Published On 2022-10-30 15:00 IST   |   Update On 2022-10-30 15:00:00 IST
  • நடவு பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.
  • விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

திருவாரூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

குறுவை சாகுபடி முடிந்து, சம்பா நெல் சாகுபடி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் தாளடி நெல் சாகுபடியினையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

தற்போது பருவ மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் நடவுப் பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.

மழை பெய்ய தொடங்கி விட்டால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு பருவமழை தீவிரமடைவதற்குள் நடவு பணிகளை முடித்து விட வேண்டும் என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ள சம்பா நெல் வயல்களில் நடவுப் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி நடவுப் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

இதுபோல் தாளடி நெல் விவசாயத்திற்கு வயல்களை தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வயல்வெளிகளில் தண்ணீர் பாசனம் நடைபெற்று வருகிறது.

இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஆறுகளில் தண்ணீர் வருவதோடு பருவமழையும் சரிவர பெய்யும் என்பதால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு நெல் சாகுபடியினை, இயற்கையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நெல் சாகுபடி பணிகள் தடையின்றி நடைபெற தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் இருப்பில் வைத்து வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News