நெல்லை ரெயில் நிலையத்தில் 2-வது நாளாக பாதுகாப்பு தீவிரம்
- தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில்நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- மெட்டல் டிடெக்டர் மூலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது
நெல்லை:
மத்திய அரசு அறிவித்த 'அக்னிபத்' திட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது.
இதனையொட்டி தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் இன்று 2-வது நாளாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயில்வே பாதுகாப்பு கோட்ட கமிஷனர் அன்பரசு உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பிரவீன் மேற்பார்வையில் இன்று ரெயில்வே தண்டவாளங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ்குமார், அஸ்வினி ஆகியோர் தலைமையில் மெட்டல் டிடெக்டர் மூலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
மேலும் மோப்பநாய் செல்வி வரவழைக்கப்பட்டு அதன்மூலமும் தண்டவாளங்களில் சோதனை நடத்தப்பட்டது. சந்திப்பு ரெயில் நிலையத்தின் வெளியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.