வனப்பகுதியில் கடும் வறட்சி மங்கலதேவி கண்ணகி கோவிலில் யானைகள் முகாம்
- வன விலங்குகள் தண்ணீர் தேடி காஞ்சிமரத்துறை, சுருளியாறு மின் நிலைய குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன.
- மங்கலதேவி கண்ணகி கோவிலில் யானைகள் கூட்டம் முகாமிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது.
இதையொட்டிய வனப்பகுதியான வண்ணாத்திப்பாைற, சுருளியாறு உள்ளிட்ட இடங்களில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. கடும் வெப்பம் காரணமாக வன விலங்குகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி காஞ்சிமரத்துறை, சுருளியாறு மின் நிலைய குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன.
குறிப்பாக யானைகள் கூட்டமாக முகாமிட்டு ள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மங்கலதேவி கண்ணகி கோவிலில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. அங்கு வனத்துறை அலுவலக குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பகுதியிலேயே நீண்ட நேரம் காத்திருக்கிறது.
வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் இங்கு முகாமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே வனப்பகுதியில் தடுப்பணைகள் கட்டி வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.