திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை, பங்களாதேஷை சேர்ந்த 25 பேர் உண்ணாவிரதம்
- இலங்கை தமிழர்கள் பலர், தங்களை விடுதலை செய்து, தாயகம் அனுப்பிவைக்க கோரி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பங்களாதேஷத்தை சேர்ந்த 23 பேர், இலங்கையை சேர்ந்த 2 பேர் தங்களை விடுதலை செய்து, தங்களது நாட்டிற்கு அனுப்பிவைக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தல் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி:
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்படுகின்றனர். அதன்படி இலங்கை தமிழர்கள், நைஜீரியா, பல்கேரியா, பங்களாதேஷ், இந்தோனசியா உள்ளிட்ட பிற வெளிநாட்டினர் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றது, போலி கடவுச் சீட்டு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து விடுதலை செய்யப்படும் வரை இந்த சிறப்பு முகாமில் தங்கவைக்கப்படுவார்கள்.
இந்த முகாமில் அவர்கள் சமைத்து சாப்பிடவும், செல்போன் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை தமிழர்களுக்கு தினசரி உணவு படியும் வழங்கப்படுகிறது. இதில் இலங்கை தமிழர்கள் பலர், தங்களை விடுதலை செய்து, தாயகம் அனுப்பிவைக்க கோரி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பங்களாதேஷத்தை சேர்ந்த 23 பேர், இலங்கையை சேர்ந்த 2 பேர் தங்களை விடுதலை செய்து, தங்களது நாட்டிற்கு அனுப்பிவைக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகாமில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.