உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி ஜெயிலில் கைதிகள் 'திடீர்' போராட்டம்

Published On 2024-11-19 11:39 GMT   |   Update On 2024-11-19 11:39 GMT
  • புதுச்சேரி அரசின் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும் கமிட்டி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
  • மற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க ஜெயில் நிர்வாகம் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும் 500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 107 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர்.

ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உணவு தயாரித்து வழங்க தனியாக சமையலர்கள் யாரும் கிடையாது. ஆயுள் தண்டனை கைதிகள் மூலம் உணவு சமையல் செய்து மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கிடையே 20 ஆண்டுகள் கடந்தும் ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசின் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும் கமிட்டி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதியான பிரபல தாதா கருணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே சென்றார். பின்னர் அவர் தலைமறைவானார். அதன் பிறகு அவரை போலீசார் கைது செய்து மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு மற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க ஜெயில் நிர்வாகம் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆயுள் தண்டனை கைதிகள் கருணா, வெங்கடேஷ் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதையடுத்து இருவரையும் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது கருணா, வெங்கடேஷ் இருவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயிலில் தண்டனை கைதிகள் சிலருக்கு பரோல் விடுமுறை அளிக்க சிறை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தண்டனை கைதிகள் உணவு சமைக்க மாட்டோம் என போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து சிறை நிர்வாகம் விசாரணை கைதிகள் மூலம் உணவு சமைத்து வழங்கி வருகின்றது.

Tags:    

Similar News