உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

Published On 2022-09-27 06:14 GMT   |   Update On 2022-09-27 06:14 GMT
  • மாணவிகள் கொடுத்த புகார் நாகை மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
  • பள்ளிக்கு வந்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, வி.ஏ.ஓ. ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அசோகன் (வயது 38) பணியாற்றி வந்தார். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் சிலரின் மொபைல் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ஆபாச தகவல் அனுப்பி உள்ளார். மேலும் பாலியல் ரீதியாக அடிக்கடி குறுந்தகவல் அனுப்பினார். மேலும் ஆசிரியர் அசோகன் தனது வீட்டின் அருகே டியூசனும் நடத்தி வந்துள்ளார். அங்கு படிக்க வரும் மாணவிகளுக்கு நேரடியாக பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்ததாகவும் மாணவிகள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியர் குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து மாணவிகள் கொடுத்த புகார் நாகை மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பேரில் பள்ளிக்கு வந்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, வி.ஏ.ஓ. ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புகார் கொடுத்த மாணவி உள்ளிட்ட மற்ற மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மாணவிகள் உடற்கல்வி ஆசிரியர் அசோகன் அடிக்கடி வாட்ஸ் அப்பில் பாலியல் ரீதியாக மெசேஜ், படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துக்கு இடையே உடற்கல்வி ஆசிரியர் அசோகன் கடந்த 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை.

புகார் குறித்து அவரிடம் விளக்க கடிதம் கேட்டு அவரது வீட்டு முகவரிக்கு விரைவு தபால்மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக கரியாப்பட்டினம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News