குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- எறையூர் ஊராட்சியில் உள்ள கெங்கையம்மன் கோவில் தெரு பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
- புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் ஊராட்சியில் உள்ள கெங்கையம்மன் கோவில் தெரு பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வரும் குடிநீரை இப்பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து கான்கிரட் தூண்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது இடிந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்துமோ என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவும், மேலும் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அபாயகரமான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை ஊராட்சி நிர்வாகம், வட்டார அலுவலர்கள் உடனடியாக இடித்து அகற்றி புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.